அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, திமுக அரசு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ்.. இவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. இந்த விசாரணையின் போது 2015 முதல் 2021 வரை அவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சேர்த்தது தெரியவந்தது.. தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பெயரிலும் ரூ.58,4438,252 அளவுக்கு சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்தது.
இந்த விசாரணையின் அடிப்படையில் காமராஜ், டாக்டர் இனியன், டாக்டர் இன்பன், சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு நேற்று செய்துள்ளது.. இந்த வழக்கினை தொடர்ந்து சென்னை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்..
இந்நிலையில் காமராஜ் மற்றும் அவரின் உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.. தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “ அதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக அரசு, முன்னாள் அமைச்சர் திரு.ஆர்.காமராஜ் மீதும் அவரது நண்பர்கள்,உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது.. அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்..