நகைக்கடையில் கவரிங் செயினை வைத்துவிட்டு, தங்கச் செயினை திருடிச் சென்ற திமுக வார்டு செயலாளரால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் எஸ்.என்.கோபால் ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த நகைக்கடைக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் நகை வாங்க வந்துள்ளார். அப்போது, கடையில் இருந்தவர்கள் அவருக்கு நகைகளை எடுத்து காண்பித்துள்ளனர். அந்தப் பெண் நகைகளை பார்த்துவிட்டு, டிசைன் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து கடையின் உரிமையாளர் நகைகளை சரிபார்த்த போது, தங்க செயின் வைத்திருந்த பெட்டியில் கவரிங் செயின் ஒன்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்துள்ளார்.
அதில், அந்தப் பெண் தங்க செயினை எடுத்துக்கொண்டு அதில் கவரிங் செயினை வைத்துச் சென்றது தெரியவந்தது. உடனடியாக கடை உரிமையாளர் அந்தப் பெண்ணை அங்கு தேடிப் பார்த்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பிடித்து விசாரித்தபோது, அவர் குரும்பூர் திமுக நகரச் செயலாளர் பாலன் கே.ராஜன் என்பவரின் மனைவியும், அங்கமங்கலம் ஊராட்சி மன்ற 8-வது வார்டு திமுக செயலாளருமான பொற்கொடி தேவி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்த தங்கச் செயினை கடை உரிமையாளர் வாங்கிச் சென்றார்.