பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் மருமகள் மெர்லினா ஆகியோர் திருவான்மியூரில் வசித்து வந்தனர். இவர்கள் வீட்டில் பணிபுரிந்த பட்டியலின பெண்ணை தாக்கி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஆடைகளை களைந்து அடித்து துன்புறுத்தியதாகவும், சிகரெட்டால் சுட்டு சித்ரவதை செய்தாகவும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி கண்ணீர் மல்க பேசிய வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இருவர் மீதும் திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில், எஸ்சி/எஸ்டி சட்டப்பிரிவுகள், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினாவும் ஆகியோர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். மேலும் இவர்களை பிடிக்க போலீசார் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளமான X-ல் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “18/01/2024 அன்று, பல்லாவரம் திமுக எம்எல்ஏ திரு கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத் துன்புறுத்தி, கடுமையாக காயப்படுத்தியதற்காக நடவடிக்கை எடுக்கக் கோரினோம். குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது இந்த திமுக அரசின் உண்மை முகத்தைக் காட்டுகிறது.
தி.மு.க.வைப் பொறுத்தவரை சமூக நீதி என்பது மேடைப் பேச்சு, உண்மையில் அவர்கள் அதை வழங்குவதில் இருந்து வெகு தொலைவில் உள்ளனர். வேங்கைவாயல் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காதது, சேலத்தில் கோயிலுக்குள் நுழைந்த திமுக பிரமுகர் இளைஞரை வாய்மொழியாக அவதூறாகப் பேசியது, சென்னையில் திமுக எம்எல்ஏ குடும்பத்தினரால் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்த சிறுமியை தாக்கியது ஆகியவை திமுகவின் உண்மையான உள்நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.