அனுமதி இன்றி லியோ படத்தின் பேனர்களை வைக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. லியோ படத்தின் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியை காலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும். அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு நேற்று முதல் வழக்காக நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த அவர் லியோ படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்தார். 9 மணிக்கு காட்சிக்கு பதிலாக படத்தை 7 மணிக்கு தொடங்க அனுமதி கோரி மனு அளிக்குமாறு பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டதுடன், இன்றைக்குள் இது குறித்த உத்தரவை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என கூறினார். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் லியோ படத்திற்கு விளம்பர பதாகை, கட் அவுட் உள்ளிட்டவைக்கு தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கடந்த காலங்களில் கட்சி மற்றும் சினிமா சார்ந்து வைக்கப்பட்ட கட் அவுட், விளம்பர பதாகையால் விபத்துகள் ஏற்பட்டு மரணங்களும் நிகழ்ந்துள்ளன, எனவே லியோ திரைப்படத்திற்கு வைக்கப்படும் ராட்சத விளம்பர பதாகை, கட் அவுட் மற்றும் பயங்கர சத்தத்துடன் வெடிக்கப்படும் வெடி பொருட்கள் ஆகியவற்றுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தியேட்டர்கள் முன்பு ப்ளக்ஸ் பேனர்கள் வைக்க எந்த அனுமதியும் தரவில்லை என்று அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தை முன் வைத்தார். உடனே குறுக்கிட்ட மனுதாரர், திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டதாக கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அனுமதி இன்றி லியோ படத்தின் பேனர்களை வைக்க கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.