ஈரானில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு காரணமாக உடல் சிதறி பலியானோர் எண்ணிக்கை 103ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த சம்பவம் அச்சத்தையும் சோகத்தையம் ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் காஸிம் சுலைமாணி கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது இந்த படுகொலைக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அவரது உடல் டெஹ்ரானின் தெற்கு நகரான கெர்மான் என்ற இடத்தில் ஷாஹில் அல் ஜமான் என்ற மசூதியில் அடக்கம் செய்யப்பட்டது. அந்தவகையில், நேற்று அவரது நான்காம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். அப்போது கல்லறைக்கு அருகே அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்து சிதறின. முதல் குண்டு வெடிப்பு ஜெனரல் சுலைமானியின் கல்லறையில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவிலும் இரண்டாவது குண்டு வெடிப்பு ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் நிகழ்ந்தது.
இதில் 103க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். குறைந்தது 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கெர்மனின் அவசர சேவையின் தலைவர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இரண்டு வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட பைகள் வெடித்து சிதறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 நிமிட இடைவெளியில் இந்த பயங்கர குண்டு வெடிப்புகள் அரங்கேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த குண்டுவெடிப்புகள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் நிகழ்த்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது குண்டுவெடிப்பில் மூன்று மீட்புப்படையினர் கொல்லப்பட்டதாக ஈரானின் ரெட் கிரசண்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது.