கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதை தொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என்றும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்று கொண்டு பொதுமக்கள் செல்போனில் ‘செல்ஃபி’ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் ஆறு, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் அதிகளவு வரும் என்பதால் அந்த பகுதிகளுக்கு தங்கள் குழந்தைகளை விளையாட செல்லவிடாமல் பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
விவசாயிகள் தங்களின் கால்நடைகளை நீர்நிலைகளின் அருகே மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும், நீர்நிலைகள் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பாலங்களை தவிர நீர்நிலைகளை கடந்து செல்லும் இதர பாதைகள் இருப்பின் அவற்றை அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் பொதுமக்கள் செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் விக்கிரமங்கலம் அருகே கொள்ளிடம் ஆற்றின் இருகரைகளையும் தண்ணீர் தொட்டுச்செல்வதால் கரையோர பகுதிகளான முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுரந்தான் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றில் குளிப்பது உள்ளிட்டவற்றுக்காக செல்லக்கூடாது, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கும் வகையில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் விக்கிரமங்கலம் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.