கடந்த மூன்று மாதங்களில் முக்கிய மண்டிகளில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலைகள் சராசரியாக கிட்டத்தட்ட 10% குறைந்துள்ளன.
நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி கரே இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தினருடனும், பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனை சங்கிலி நிறுவனத்தினருடனும் ஆலோசனை கூட்டம் நடத்தினார். முக்கிய பருப்பு வகைகளின் விலை நிலவரம் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய நுகர்வோர் விவகாரங்கள் துறைச் செயலாளர், இந்த ஆண்டு கரீஃப் பருவத்தில் பருப்பு வகைகளின் அதிக விளைச்சல் காரணமாக கடந்த சில மாதங்களில் பெரும்பாலான பருப்பு வகைகளின் மண்டி விலைகள் குறைந்து வருகின்றன என்றார். கடந்த மூன்று மாதங்களில் முக்கிய மண்டிகளில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலைகள் சராசரியாக கிட்டத்தட்ட 10% குறைந்துள்ளன என்று அவர் கூறினார்.
ஆனால் சில்லறை விலைகள் இதேபோன்று குறையவில்லை. மொத்த மண்டி விலைகளுக்கும் சில்லறை விலைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள், உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.