கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் வாழை விவசாயிகளுக்கு கடன் வழங்கியதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “கடந்த ஆண்டு 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக வழங்க வேண்டும் என்பதற்காக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 5,33,357 உறுப்பினர்களுக்கு, ரூ.4,054.24 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கோழி, ஆடு, மீன் வளர்ப்போருக்கு இதுவரை 1.25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.589 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரூ. 4000 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் என அடுத்த 3 மாதங்கள் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. 15 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2,755 கோடி ரூபாய் கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 780-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களின் ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. நகைக்கடன் தள்ளுபடி இதுவரை 4900 கோடி வரை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், யார் பயனடையவில்லை என்பதை கண்டறிந்து, அவர்களும் பயனடையும் படியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், சுமார் 50,000 விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டதாக கூறப்படுவதில் முறைகேடு நடந்துள்ளது. வாழை பயிர் செய்யாத விவசாயிகளுக்கு வாழை பயிரிட்டதாக கணக்கிட்டு தள்ளுபடி கொடுத்திருக்கிறார்கள். வாழை விவசாயமே செய்யாதவர்களுக்கும், நிலமே இல்லாதவர்களுக்கும் தள்ளுபடி செய்ததாக கணக்கு உள்ளது. சோளம் பயிரிட்டால் ரூ.12,000 தான் கடன் வழங்கப்படும், வாழை பயிரிட்டால் 60 ஆயிரம் வழங்கப்படும். சோளம் பயிரிட்டவர்களுக்கு, அவர்கள் வாழை பயிரிட்டதாக கூறி பதிவு செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்தில் ரூ.500 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன. மற்ற மாவட்டங்களிலும் எந்த ஆவணங்களும் இல்லாமல் இப்படி முறைகேடாக கடன் வழங்கியுள்ளனர். அதற்காகவே இப்போது வழிமுறைகளை உருவாக்கி இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.