போடி அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் 3ம் ஆண்டு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்து வந்தார். செமஸ்டர் தேர்வு நடந்து வரும் நிலையில் விக்னேஷ் கல்லூரி விடுதியில் உள்ள சுகாதார வளாகத்திற்கு சென்றவர் நெடுநேரம் கடந்தும் மீண்டும் அவர் அறைக்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த மற்ற மாணவர்கள், விடுதி காவலருடன் கழிவறைக்கு சென்ற பார்த்தபோது கழிவறை உள்பக்கமாக பூட்டி இருந்தது.
நெடுநேரமாக கதவை தட்டியும் திறக்காததால் அங்கிருந்தவர்கள் கதவை உடைத்து பார்த்த போது விக்னேஷ் காயத்துடன் சடலமாக கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறப்பில் சந்தேகம் இருப்பதாக மாணவரின் பெற்றோர் கூறியதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து அவரது தாயார் காவல்துறையில் முறையிட்டு கழிவறையில் இருந்த அதிக அளவு இரத்தம் குறித்து கேட்க, “எறும்பு கடித்ததால் வந்திருக்கலாம்” என்று பொறுப்பற்ற முறையில் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் காவல்துறை தெரிவித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணை என்பதே விந்தையானதாக மாறிவிட்டது. இசிஆர் வழக்கில் டோல் கேட்டில் விலக்கு பெற திமுக கொடி கட்டிய குற்றவாளி; இப்போது, எறும்பு கடித்து இவ்வளவு இரத்தம் சிந்தி, மர்மமாக உயிரிழந்த மாணவன் என இவர்கள் விசாரணை எல்லாம் சினிமாவில் வைத்தால் கூட யாரும் நம்ப முடியாத அளவில் தான் இருக்கிறது.
பட்டியலினத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியான மாணவன் விக்னேஷின் மரணத்தின் உண்மையான காரணத்தை மறைத்து திசைதிருப்ப ஸ்டாலின் மாடல் திமுக அரசு முயற்சிக்குமாயின், அது கடும் கண்டனத்திற்குரியது. மாணவன் விக்னேஷின் மரணத்திற்கான காரணத்தை முறையாக விசாரணை செய்து கண்டறிந்து, அதில் யாருக்கேனும் தொடர்பிருப்பின், கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டிருந்தார்.
Read more : மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு குறைவாக உள்ளதா..? இதுதான் காரணம்..!