ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் சர்ச்சையில் உள்ள நிலையில், “பொதுச்செயலாளருக்கு அடுத்த நிலையில் உள்ள பொருளாளருக்கு தான் கட்சியை வழி நடத்தும் அதிகாரம் உள்ளது. பொருளாளரான ஓபிஎஸ் ஒப்புதல் இன்றி பொதுக்குழுவை கூட்டினால் அது செல்லாது. அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகளை செய்தாலும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை” என்று ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சரும், இபிஎஸ் ஆதரவாளருமான நத்தம் விஸ்வநாதன், “அதிமுக பொதுக்குழு சட்டப்படி, சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும். இதை யாராலும் தடுக்க முடியாது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமியை நியமனம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்படும். குறிப்பாக, எம்ஜிஆர், அம்மா காலத்தில் பொதுச்செயலாளர் பதவியில் என்னென்ன அதிகாரங்கள் இருந்ததோ, அத்தனை அதிகாரங்களையும் உள்ளடக்கிய பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, அந்த பதவியில் எடப்பாடி பழனிசாமியை நியமனம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.
இந்நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும், அதே சமயம், அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.