அமெரிக்காவில், 33 வயதான கிறிஸ்டின் என்ற இளம்பெண் தன்னுடைய சினைக்குழாயில் (Fallopian tubes) அடைப்பு உள்ளதா என்பதைப் பரிசோதிப்பதற்காக, பென்சில்வேனியாவில் உள்ள மெயின்லைன் கருவுறுதல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் அலிசன் ப்ளூம் என்பவர், கிறிஸ்டினுக்கு உப்புக் கரைசலுக்கு பதிலாக ஊசி வாயிலாக டிரைகுளோரோ அசிட்டிக் அமிலத்தை அவருடைய கருப்பையில் செலுத்தியுள்ளார்.
இந்த அசிட்டிக் அமிலம் பிறப்புறுப்புகளில் ஏற்படும் மருக்களை குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து சிறிது நேரத்திலேயே கிறிஸ்டினின் தொடை மற்றும் கால் பகுதிகளில் சிவப்பு நிற மருக்கள் தோன்றியுள்ளன. எரிச்சலால் அவதிப்பட்ட அவர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ”மெயின்லைன் நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிறகு என் உடலின் உள்ளே எரிவதை உணர்ந்தேன். அப்போது ஏதோ சரியில்லை என எனக்குத் தோன்றியது.
அதனால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றபோதுதான் அவர்கள் எனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். மருத்துவர்களின் அலட்சியத்தால் என் பிறப்புறுப்பு பலத்த காயமடைந்துள்ளது. என்னால் நிம்மதியாக உட்கார முடியவில்லை, அமர்ந்தால் கடுமையான வலியை ஏற்படுகிறது. இனி எனக்கு குழந்தை பிறக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. என் வருங்காலத்தை நினைத்து பயமாகவுள்ளது” என வேதனையுடன் பகிர்ந்துள்ளார் கிறிஸ்டின்.
இதுதொடர்பாக வெளியான மருத்துவ அறிக்கையில், கிறிஸ்டினின் கருப்பையில் செலுத்தப்பட்ட அமிலமானது 85% செறிவுடன் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. இது அதிக எரிச்சலை ஏற்படுத்தக்கூடியது மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பு கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த அமிலத்தின் நீண்டகால விளைவுகள் என்னவென்று தெரியவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் டிசம்பர் 19, 2022ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. அப்போதிலிருந்து கிறிஸ்டின் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது தன் உடல்நிலை சற்று தேறிய பிறகு தன் நிலைக்கு காரணமான மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். ”சிந்திக்க முடியாத இந்தச் சூழ்நிலைக்கு வழிவகுத்த மொத்த பொறுப்பற்ற செயல்களுக்கும் மருத்துவர் அலிசன் ப்ளூம் மற்றும் பிற மருத்துவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். கிறிஸ்டினின் இந்த நிலைக்கு அவர்கள் நஷ்டஈடு வழங்க வேண்டும்” என கிறிஸ்டினின் வழக்கறிஞர் ராபர்ட் மில்லர் கூறியுள்ளார்.