Shreya Ghoshal: தன்னுடைய குரலால் அனைவரையும் வசீகரித்து வரும் இசை உலகின் பேரரசி மெலடி குயின் ஸ்ரேயா கோஷல் பிறந்தநாளான இன்று அவரை குறித்த சுவாரஸ்ய தகவல்களை இத்தொகுப்பில் பார்ப்போம்.
1984ஆம் ஆண்டு, மார்ச் 12ம் தேதி மேற்கு வங்கத்தில் உள்ள பெர்ஹாம்பூர் நகரில் பிறந்தார் ஸ்ரேயா கோஷல். பின்னணி பாடகியாக அறியப்படும் இவர், தனது நான்கு வயது முதல் பாடி வருகிறார். இவர், 2002ஆம் ஆண்டு பாலிவுட்டில் சஞ்சய் லீலா பன்சாலியின் தேவ்தாஸ் படத்தில் இவர் பாடகியாக அறிமுகமானார். அவர் பாடிய முதல் பாடலுக்கு தேசிய விருது தேடி வந்தது.
அன்று தொடங்கி இன்று வரை இசையுலகின் நிகரில்லாத ராணியாக வலம் வருகிறார் ஸ்ரேயா கோஷல். 2002ஆம் ஆண்டில் கார்த்திக் ராஜா இசையமைப்பில் ‘ஆல்பம்’ என்ற படத்தில், ‘செல்லமே செல்லம் என்றாயடி’ பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டு, இளையராஜா இசையமைப்பில் வெளியான சேரனின் ‘சொல்ல மறந்த கதை’ படத்தில் ‘குண்டு மல்லி’ பாடலையும் பாடியிருந்தார்.
இவர் தொடர்ந்து, மணி சர்மா, கீரவாணி, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரத்வாஜ், ஹாரிஸ் ஜெயராஜ், தேவா, ஜீ.வி. பிரகாஷ் குமார், ஸ்ரீகாந்த் தேவா, இமான், ஜேம்ஸ் வசந்தன், விஜய் ஆண்டனி, தமன், அனிருத், தேவி ஸ்ரீ பிரசாத், டிரம்ஸ் சிவமணி, சாம் சி.எஸ், ஜஸ்டின் பிராபாகரன் உள்ளிட்ட தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.
‘நினைத்து நினைத்து பார்த்தேன்…’ (7ஜி ரெயின்போ காலனி); ‘உன்னவிட…’ (விருமாண்டி); ‘அண்டங்காக்கா கொண்டக்காரி…’ (அந்நியன்); ‘தாவணி போட்ட தீபாவளி’ (சண்டக்கோழி); ‘முன்பே வா… என் அன்பே வா’ (சில்லுனு ஒரு காதல்); ‘அய்யய்யோ’ (பருத்திவீரன்); ‘உருகுதே உருகுதே…’ (வெயில்) என இவரின் தனித்துவமான நூற்றுக்கணக்கான பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இவர் சுமார் 10 ஆண்டுகளாக காதலித்து வந்த ஷிலாதித்ய முகோபாத்யாயா என்பவரை 2015ஆம் ஆண்டில் மணந்துகொண்டார். இந்த தம்பதிக்கு, 2021ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
பல மொழித் திரைப்படங்களிலும் பின்னணிப் பாடல்களை நான்கு முறை தேசிய விருதும், ஏழு முறை ஃபிலிம்பேர் விருதும், பத்து முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் ஆல்பங்களையும் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ள அவர், இதன் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தொடந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதனால் அவருக்கென தனி ரசிகர்கள் ஆர்மி உலகெங்கும் உருவாகியுள்ளது. இந்தியாவின் சிறந்த 100 பிரபலங்களின் பட்டியலில் ஃபோர்ப்ஸ் பத்திரைகையில் ஐந்து முறை இடம்பெற்றுள்ளார்.
2010ம் ஆண்டு அமெரிக்க மாநிலமான ஓஹியோ(ohio)வில் அதன் அப்போதைய ஆளுநர் டெட் ஸ்ட்ரிக்லேண்ட் என்பவர் ஜூன் 26ம் தேதியை “ஸ்ரேயா கோஷல் தினம்” என்று அறிவித்து ஸ்ரேயா அவரை கவுரவித்தார். 2017ஆம் ஆண்டில் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை நிருவப்பட்ட முதல் இந்திய பாடகி ஆனார் ஸ்ரேயா கோஷல்.
ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ஸ்ரேயா இசைதுறையில் இதுவரை நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். பிறமனிதர்களை மகிழ்விக்க கூடிய திறன் உலகில் ஒரு சிலரிடம் மட்டுமே உள்ளது. அந்த வரிசையில் தன்னுடைய குரலால் அனைவரையும் வசீகரித்து வரும் இசை உலகின் பேரரசி ஸ்ரேயா கோஷல் இந்த பூமிக்கு கிடைத்த வரம். இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவருக்கு பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Readmore: பொன்முடிக்கு Green Signal..!! மீண்டும் எம்.எல்.ஏ. பதவி..!! சட்டப்பேரவை செயலகம் முக்கிய அறிவிப்பு..!!