சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள எஸ்.எம்.சுப்ரமணியம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நேற்று தனது குடும்பத்தினருடன் வடபழனி முருகன் கோயிலுக்கு சென்றதாகவும், நீதிபதி என்ற அடையாளத்தை வெளிப்படுத்தாமல் சிறப்பு தரிசனத்திற்காக நூற்றைம்பது ரூபாய் கொடுத்து மூன்று டிக்கெட்கள் வாங்கியதாக கூறியுள்ளார்.
அப்போது, கவுண்டரில் இருந்த பெண் ஊழியர் ஐம்பது ரூபாய்க்கான இரண்டு டிக்கெட்களையும், ஐந்து ரூபாய்க்கான ஒரு டிக்கெட்டையும் வழங்கியதாகவும், இதுகுறித்து கேள்வி எழுப்பிய பின் 50 ரூபாய் டிக்கெட்டை பெண் ஊழியர் வழங்கியதாக கடிதத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோயில் செயல் அலுவலரிடம் புகாரளிக்க அவரது அறைக்கு சென்றபோது, அங்கிருந்த ஊழியர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும், கோயில் செயல் அலுவலரின் தொடர்பு எண்ணைக்கூட தமக்கு வழங்கவில்லை என கூறியுள்ளார்.
இதனையடுத்து தாம் நீதிபதி என சொல்ல நேர்ந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கோவில் செயல் அலுவலரை நீதிமன்றம் வரவழைத்த நீதிபதி, ஐந்து ஊழியர்கள் மீதும் விசாரணை நடத்த வேண்டுமெனவும் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 9ம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். பல இடங்களில் சாதாரண மக்களுக்கு மரியாதையே இல்லை என்பதை இந்த சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது.