அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையேயான மோதல் உச்சத்தை எட்டி உள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தேர்தல் அந்த மோதலை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.. ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே வேட்பாளர்களை அறிவித்த நிலையில், இரட்டை இலை சின்னம் முடங்கிவிட கூடாது என்பதற்காக தங்கள் தரப்பு வேட்பாளரை திரும்ப பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்தது.. இதனால் இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரான தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் அதிமுகவின் அதிகார மையமாக இபிஎஸ் மாறிவிட்டார் என்று கூறப்படுகிறது..
ஆனால் அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி அதற்கு நேர்மாறான கருத்தை தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் “ உச்சநீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொது செயலாளர் என ஏற்கவில்லை.. மேலும் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்டால் தான், ஏ ஃபார்ம், பி ஃபார்ம் செல்லும் என்று உத்தரவிடவில்லை.. அண்ணாமலை கூப்பிடுவதால் மட்டும் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராகிவிட முடியாது.. அவரை பொது செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டியது அதிமுக தொண்டர்கள்.. தேர்தல் ஆணையம் அதனை அங்கீகரிக்க வேண்டும்.. இவை இரண்டுமே நடக்கவில்லை..
ஓபிஎஸ், இபிஎஸ் 2 பேரையும் தவிர்த்து, தமிழ் மகன் உசேன் கையெழுத்துக்கு தான் உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் கொடுத்துள்ளது.. எடப்பாடி பழனிசாமியின் கைகளில் இருந்து அதிகாரம் நழுவி செல்கிறது.. தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.. இடைக்கால பொதுச்செயலாளர் பதவி இன்னும் நிலுவையில் உள்ளது.. இணை ஒருங்கிணைப்பாளர் பதவியையும் இபிஎஸ் ராஜினாமா செய்துவிட்டார்.. இன்றைய தேதியில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்கள் தான்.. தமிழ்மகன் உசேன் அவைத்தலைவர்..
தமிழ்மகன் உசேனுக்கு பதிலாக எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போடுவார் என்று தீர்மானம் நிறைவேற்றி, அதன்படி செயல்பட்டிருந்தால் அதிமுக, எடப்பாடி பழனிசாமி கைக்கு சென்றதாக எடுத்துக் கொள்ளலாம்.. ஆனால் தமிழ்மகன் உசேன் தான் கையெழுத்து போட்டிருக்கிறார்..
இதுவரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்கு கையெழுத்து போட்டுள்ளனர்.. இப்போது முதன்முறையாக தமிழ்மகன் உசேனுக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.. இரட்டை இலை சின்னத்திற்கு யார் கையெழுத்து போடுகிறார்களோ அவர் தான் பலசாலி.. சின்னம் இருப்பவர்களிடம் தான் தொண்டர்கள் இருப்பார்கள்.. தமிழ்மகன் உசேனை தலைமை பதவிக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கும்.. சசிகலா வீழ்ந்த கதையும், எடப்பாடி பழனிசாமி வீழப்போகும் கதையும் பார்த்தால் இரண்டு ஸ்கிரிப்ட்டும் ஒரே மாதிரியாக தான் இருக்கும்..” என்று தெரிவித்தார்..