எந்த காலத்திலும் மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”புதிய கல்விக் கொள்கையை ஏற்காத தமிழ்நாடு அரசுக்கு நிதி ஒதுக்க முடியாது என மத்திய அமைச்சர் பேசியது கண்டிக்கத்தக்கது. ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன், கல்வியில் மட்டுமல்ல ஏற்கனவே அறிவித்த பட்ஜெட்டில் கூட ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. ஆனால், வரிசெலுத்தி விட்டு, ஒவ்வொரு மாநிலமும் நிதி கேட்பது அநியாயம் என்று வாய்க்கூசாமல் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் எப்போதுமே இருமொழிக் கொள்கைதான். எந்த காலத்திலும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டாம் என்று அண்ணா சொல்லியுள்ளார். எந்த வகையில் முயன்றாலும், எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காது. தமிழ்நாட்டு மக்களும் அதை அனுமதிக்க மாட்டார்கள்.
நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டாலும், நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். எங்களுக்கு அது தேவையே கிடையாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்துவம் உள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்துவிட்டு, இன்று உலகம் முழுவதும் மருத்துவர்கள், பொறியாளா்கள் சாதனைப் படைத்து வருகின்றனர். நாங்கள் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம். தமிழ்நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.