தமிழ்நாட்டில் வீடுகள், வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்திற்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலமே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதில் குடியிருப்புகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. அதேபோல நெசவாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, குடிசை வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர முதல் 100 யூனிட் மின்சாரம் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஒரே முகவரியில் ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை கணினி வழியாக மெர்ஜிங் செய்ய மின்வாரியம் வாய்மொழி உத்தரவிட்டுள்ளது. தற்போது ஒரு வீட்டில் 5 சர்வீஸ் லைன் இருந்தாலும், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், அதை மெர்ஜிங் செய்வதால், 5 இணைப்பு இருந்தாலும், அதில் ஒன்றுக்கு மட்டுமே 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த முடிவுக்கு மின்வாரிய ஊழியர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.