மகளிர் உரிமைத் தொகை எத்தனை ஆண்டுகள் வழங்கப்படுகிறதோ அத்தனை ஆண்டுகள் நான் ஆட்சி செய்வதாக அர்த்தம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ”கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று சிலர் கூறினார்கள். பொய் வதந்தி பரப்பி சிலர் திட்டத்தை முடக்க நினைத்தனர். அறிவித்து விட்டால் அந்த திட்டத்தை நிறைவேற்றி காட்டுபவன் நான்.
நிதிநிலை சரியில்லாத காரணத்தினாலேயே ஆட்சிக்கு வந்த உடன் இத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. தற்போது நிதி நிலை சீராகி விட்டதால், 1,000 ரூபாய் மகளிருக்கு வழங்கப்படுகிறது. மதத்தின் பெயரால் பழமையின் பெயராலும் பெண்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்டனர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கல்வி மறுக்கப்பட்டது. சிறுமிகள் திருமணத்தை தடுத்த திராவிட இயக்கத்தின் மீது சிலருக்கு கோபம் உள்ளது.
பெண்கள் உடல் ரீதியாக எதிர் கொள்ளும் இயற்கை சுழற்சியை கூட தீட்டு என்று கூறி வீட்டிற்குள் முடக்கி வைத்தனர். வீட்டில் பிரதிபலன் பார்க்காமல் உழைக்கும் பெண்களை சாதாரணமாக House Wife என்று கூறி விடுகின்றனர். மனைவி வேலைக்கு செல்லவில்லை என்றால் சும்மதான் இருக்கிறார் என்றும் சொல்கின்றனர். தாய்மையும் பெண்மையும் இந்த உலகத்தையே வழி நடத்துகிறது என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசினார்.