இளநிலைப் பொறியாளர் 2024-க்கான தேர்வை பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது.
இளநிலைப் பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல்) தேர்வு, 2024-க்கான தேர்வை பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது. கணினி அடிப்படையிலான இந்தத் தேர்வுக்கு தென்மண்டலத்தில் 81,301 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வுகள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் உட்பட 21 மையங்களில் உள்ள 28 இடங்களில் நடைபெறும்.
தென்மண்டலத்தில் 05.06.2024 முதல் 07.06.2024 வரை 3 நாட்களுக்கு நடைபெறும். இந்த 3 நாட்களிலும் காலை 9 மணி முதல் 11 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை, பிற்பகல் 5 மணி முதல் மாலை 7 மணி வரை என 3 ஷிப்டுகளாக தேர்வுகள் நடத்தப்படும். மின்னணு முறையிலான அனுமதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் கிடைக்கும். இதனை விண்ணப்பதாரர்கள் தங்களின் சரியான தேர்வு தேதிக்கு 4 நாட்கள் முன்னதாக மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்கள் இணையதள விண்ணப்பங்களில் குறி்ப்பிட்டுள்ள செல்பேசி எண்ணில் குறுஞ்செய்தியாகவும், மின்னஞ்சல் முகவரியில் மின்னஞ்சலாகவும் அனுப்பப்பட்டுள்ளன.
கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டு காகிதங்கள், பத்திரிகைகள், செல்பேசி, ப்ளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தேர்வுக் கூடங்களில் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது. இத்தகையப் பொருட்கள் ஏதும் தேர்வு எழுதுவோரிடம் கண்டுபிடிக்கப்பட்டால் அவரது தேர்வு ரத்து செய்யப்படுவதோடு சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும் எதிர்காலத்தில் இந்தத் தேர்வாணையத்தின் தேர்வுகளை எழுத 3 முதல் 7 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படும். மேலும் விவரங்கள் அறிய 044-2825 1139 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது 94451 95946 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.