5 வருடங்களுக்கான மருத்துவ படிப்பை முறையாக படிக்காமல் 8ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படித்துவிட்டு குறைந்த கட்டணத்தில் ஆங்கில மருத்துவம் பார்த்து பொதுமக்களின் உயிருடன் விளையாடும் போலி மருத்துவர் எண்ணிக்கை திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.
நகர்புறத்தை விடவும் கிராமப்புறங்களில் போலியான மருத்துவர்கள் வெகுவாக அதிகரித்து வருவது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போலி மருத்துவர்களின் எண்ணிக்கை திருப்பத்தூர் மாவட்டத்தில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக வாணியம்பாடி, நாற்றாம்பள்ளி, கந்திலி, ஜோலார்பேட்டை போன்ற பகுதிகளில் கிளினிக் நடத்தி மனித உயிர்களுடன் விளையாடி வரும் போலி மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தி இருக்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் தெரிவித்ததாக 3 முதல் 5 வருடங்கள் மருந்து கடைகளில் வேலை பார்ப்பவர்கள் தனியார் மருத்துவமனைகளில் உதவியாளர்களாக பணி புரிபவர்கள் மருந்து விற்பனையில் கிடைத்த அனுபவம் என்று தங்களுக்கு தெரிந்த மருத்துவ அனுபவத்தை வைத்துக் கொண்டு கிராமப்புறங்களில் அதனை தொழிலாக செய்து வருகின்ற நபர்களில் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
சாதாரணமான காய்ச்சல் தொடங்கி, தலைவலி, வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, சர்க்கரை, ரத்த அழுத்தம் கண் மற்றும் பல் வலி போன்ற பல்வேறு நோய்களுக்கு வீரியமிக்க மருந்து, மாத்திரைகளை போலி மருத்துவர்கள் கொடுப்பதால் சில நோய்கள் மிக விரைவில் குணமாகின்றனர். இதனால் கல்வி அறிவு இல்லாத கிராமப்புற மக்கள் போலி மருத்துவர்கள் ராசியான மருத்துவர்கள் என்று நம்ப தொடங்கிவிட்டனர்.
இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது முறையாக மருத்துவம் பயின்று இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற மருத்துவர்கள் மட்டுமே ஆங்கில முறைப்படி மருத்துவம் பார்க்க தகுதி பெற்றவர்கள். இது தொடர்பாக விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.
கிராம மக்களிடம் போதிய விழிப்புணர்வு காணப்படாததால் போலி மருத்துவர்கள் கிராமங்களில் மட்டுமே அதிகமாக உருவாகி இருக்கிறார்கள். அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார மையம் துணை சுகாதார மையங்களில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது. இது தெரியாத கிராம மக்கள் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்ப்பதால் போலி மருத்துவர்களை கட்டுப்படுத்த இயலவில்லை என்று கூறியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் வழங்கும் புகார்களின் அடிப்படையில், அவ்வப்போது ஆய்வு நடத்தி போலி மருத்துவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் போன்ற பகுதிகளில் 2 நாட்கள் நடத்தப்பட்ட திடீர் ஆய்வில் 10க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் நடத்தி வந்த கிளீனிக்கு சீல் வைக்கப்பட்டது.
எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் தொடர்பாக பொதுமக்கள் எங்களிடம் புகார் வழங்கினால். அதன் பெயரில் அங்கு சென்று ஆய்வு நடத்தி நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.