கஞ்சா வழக்கில் சிறை தண்டனை கொடுத்த நீதிபதிக்கு குற்றவாளிகள் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு மதுரை மாநகர் வில்லாபுரம் அருகே கருவேலங்காட்டுக்குள் இளைஞர்கள் சிலர் கஞ்சா கடத்துவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது, அங்கு வந்த போலீசார் பாண்டியராஜன், அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா அகியோரை கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் இருந்து 25 கிலோ உலர்ந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
3 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தியபோது, பிரபல ரவுடியான வெள்ளை காளியின் அண்ணன் மகன் சண்முகவேல் இரவு நேரத்தில் வந்து 25 கிலோ கஞ்சாவை வைத்திருக்கும் படி கொடுத்ததாக கூறியுள்ளனர். மேலும், சண்முகவேல் திருச்சியில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த கஞ்சாவை ஆந்திராவில் இருந்து வாங்கியுள்ளனர். இந்த வழக்கில் பாண்டியராஜன், அவரது மனைவி சரண்யா மற்றும் பிரசாந்த் ஆகியோர் கைது மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து, நேற்று இறுதி விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி ஹரிகரகுமார் தீர்ப்பு வழங்கினார். அப்போது 3 பேருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும். ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். அப்பொழுது, நீதிபதியின் உத்தரவைக் கேட்டு மூவரும் நீதிபதிக்கே கொலை மிரட்டல் விட்டனர். நீதிமன்றத்தின் கண்ணாடிகளை கையால் உடைத்து ஆவேசமாக பேசினர். ”கிளாமர் காளி வழக்கில் எதற்காக சுபாஷ் சந்திரபோஸை என்கவுண்டர் செய்தீர்கள்’ என்றதோடு, ”நாங்கள் வெள்ளை காளியின் பசங்க. வெளியே வந்ததும் நீதிபதியை கொல்லாமல் விடமாட்டோம்” எனக்கூறி பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர்.
பின்னர், அங்கிருந்த போலீசார் மூவரையும் கட்டிப்போட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ’நம்ப முடியாத விலை’..!! இல்லத்தரசிகள் செம ஹேப்பி..!! தக்காளி, வெங்காயம் விலை சட்டென சரிந்தது..!!