கண்களில் ஏற்படும் ஒருவிதமான பாதிப்பை ’பிங்க் ஐ’ என்று அழைக்கின்றனர். இது கண் இமைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள சவ்வு பகுதி வீக்கமடையும் போது ஏற்படுகிறது. இது எளிதில் பரவக் கூடியது.இதை நம் ஊரில் ’மெட்ராஸ் ஐ’ என்று அழைப்பர். இது பெரும்பாலும் கோடைக் காலங்களில் தான் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தற்போது யாரும் எதிர்பாராத வண்ணம் கர்நாடகா மாநிலத்தில் வேகமாக பரவி கொண்டிருக்கிறது. ஒரே வாரத்தில் 40,477 பேருக்கு பிங்க் ஐ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பெங்களூருவில் பாதிப்புகள் குறைவாக இருப்பதாக தோன்றினாலும் பரவும் வேகம் அதிகம் என்கின்றனர். இதில் மிகவும் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது. பிங்க் ஐ பாதிப்பு என்பது முன்பெல்லாம் அடினோ வைரஸ் மூலம் ஏற்பட்டு வந்தது. தற்போது எண்டெரோ வைரஸ் மூலம் பரவி கொண்டிருக்கிறது.
அதாவது, வைரஸ் தோற்றுவிக்கும் பாதிப்புகளில் மாற்றம் வந்திருக்கிறது. இதுதொடர்பாக உரிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அரசு தரப்பு முகாம்கள் மூலம் மக்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.