வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக உருவானது. இந்த புயலுக்கு ஃபெஞ்சல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களி மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. விடிய விடிய பெயத கனமழையால் சாலைகள் குளம் போல் காட்சியளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று மதியம் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், புயல் கரையை கடப்பதில் தாமதம் ஏற்படலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் தான் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் புயல் கரையை கடக்கும் வரை கனமழை தொடரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்துவருகிறது. மக்கள் அனைவரும் சென்னை வானிலை மையம் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மழைநீர் வடிகால் பணிகள் என்று திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இனி இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை! எனவே, எனது அறிவுறுத்தலின்படி, அதிமுக சார்பில் ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளை கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : சென்னையில் ஆட்டத்தை தொடங்கிய ஃபெஞ்சல் புயல்..!! பலத்த காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை..!!