அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. தனது தலைமையில் ஒற்றை தலைமை அமைய வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.. ஆனால் ஓபிஎஸ் இரட்டை தலைமையே வேண்டும் என்று கூறி வருகிறார்.. இதனிடையே ஜூலை 11-ல் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது..
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு நடத்துவது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது. ஓபிஎஸ், தனது இல்லத்தில் இருந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகத்திற்கு புறப்பட்டார்.. மறுபுறம், எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் பங்கேற்க சென்றுள்ளார்..
இந்த நிலையில் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தாக்கியதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது..
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்கி கொள்வதால் பெரும் பதட்டம் நிலவுகிறது.. ஓபிஎஸ் வாகனத்தை அதிமுக தலைமை அலுவலகம் அருகே செல்ல முடியாத அளவிற்கு கல்வீச்சு தாக்குதல் நடைபெற்று வருகிறது. மேலும் கம்புகளை வீசியும் இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்..
இதனால் அதிமுக தலைமை அலுவலகமே கலவர பூமியாக காட்சியளிக்கிறது..
ஓபிஎஸ் அதிமுக அலுவலகம் சென்றுள்ள நிலையில், அவரின் வாகனத்தை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.. மேலும் பயங்கர மோதலில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கு கத்திக்குத்து நடந்துள்ளது.. இரு தரப்பு ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்..