33 வயது பெண் ஒருவர் கட்டாய கருக்கலைப்பு தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கிழக்கு டெல்லியின் ஜீதாபூர் என்ற பகுதியில் அரங்கேறிய சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ”உயிரிழந்த பெண் கடந்த 8 ஆண்டுகளாகவே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் இவருக்கு மென்பொருள் பொறியாளர் ஒருவருடன் உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் லிவ் இன் ரிலேஷன்சிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். அந்த பொறியாளர், பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தொடர்ந்து நம்பிக்கை அளித்து ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இந்த 7 ஆண்டுகால உறவின் போது சுமார் 14 முறை அந்த பெண் கருவுற்றுள்ளார். அனைத்து முறையும் அவரோடு உறவில் இருந்த மென்பொருள் பொறியாளர் கருவை கலைக்கக் கூறி கட்டாயப்படுத்தியுள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் இப்படி கட்டாயக் கருக்கலைப்பில் தொடர்ந்து ஈடுபடுத்தியதால் மனம் உடைந்த அந்த பெண் தற்கொலை குறிப்பு எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது. ஆனால், அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்ணின் பெற்றோர் பீகாரில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு, அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், பெண் தங்கியிருந்த வீட்டின் அறையில் சோதனை மேற்கொண்ட போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், அந்த பெண்ணுடன் உறவில் இருந்த மென்பொருள் பொறியாளர் மீது 306, 376, 313ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த பெண்ணின் முதல் கணவரிடமும் காவல்துறை விசாரித்து வருகிறது.” இவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.