டெல்லியின் ஃபரிதாபாத் மருத்துவமனையின் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது நச்சு வாயுவின் காரணமாக நான்கு துப்புரவுத் தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். ரோஹித், அவரது சகோதரர் ரவி, விஷால் மற்றும் ரவி கோல்டர் ஆகிய நான்கு தொழிலாளர்கள் தான் பலியாகி உள்ளனர்.
டெல்லியின் தக்ஷின்புரியில் உள்ள சஞ்சய் முகாமில் வசிப்பவர்கள், சந்தோஷ் அல்லிட் சர்வீஸ் என்ற ஏஜென்சி மூலம் பாதாள சாக்கடை சுத்தம் செய்வதற்காக ஃபரிதாபாத்தில் உள்ள QRG மருத்துவமனைக்கு வந்துள்ளனர். நால்வரும் பாதாள சாக்கடைக்குள் எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் சுத்தம் செய்திருந்தனர். இதன் போது விஷ வாயுவை சுவாசித்ததில் மூச்சு திணறி மயங்கி விழுந்தனர். அவர்கள் உதவிக்காக கூச்சலிட்டதும், சக ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
நான்கு பேரும் வெளியே அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மொஹிந்தர் வர்மா கூறினார். இறந்த நபர்களின் உடல்கள் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.