பீகார் மாநிலத்தை சார்ந்த அவுதேஷ்(24), நிதீஷ்குமார்(24) உள்ளிட்ட இருவரும் கோவை மாவட்டம் செட்டிபாளையம் அடுத்து இருக்கின்ற சீராபாளையம் என்ற பகுதியில் இருக்கின்ற தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தனர். அத்துடன் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான குடியிருப்பில் இவர்கள் இருவரும் தங்கி வேலை பார்த்ததாக தெரிகிறது.
இப்படியான சூழ்நிலையில், நேற்றைய தினம் இரவு அவுதேஷ்குமார், நிதீஷ்குமார் உள்ளிட்டோர் மலுமிச்சம்பட்டிக்கு சென்று தங்களுக்கு தேவைப்படும் மளிகை பொருட்களை வாங்கி இருக்கின்றனர். அதன் பிறகு 2 பேரும் அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு நடந்து வருகை தந்து கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் அந்த பகுதியில் மிகவும் வேகமாக வந்த ஒரு கார் அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் பறந்தது. இந்த சம்பவத்தில் அவுதேஷ்குமார், நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் இருவரையும் அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு அந்த பகுதியில் இருக்கின்ற தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவலின் அடிப்படையில் செட்டிபாளையம் காவல்துறையினர் விரைந்து வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அத்துடன் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து இந்த விபத்து ஏற்படுவதற்கு காரணமாக இருந்த கார் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.