தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, திமுக எம்எல்ஏ அசோக்குமார் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ”ஏற்கனவே இருக்கும் முழு நேரக் கடைகளைப் பிரிக்க வேண்டுமென்றால், நகரப் பகுதிகளில் 1,000 குடும்ப அட்டைகளுக்கு மிகாமலும், 800 குடும்ப அட்டைகளுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும். அதேபோல், ஊரகப் பகுதிகளில் 800 குடும்ப அட்டைகளுக்கு மிகாமலும், 500 குடும்ப அட்டைகளுக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
தாய்க் கடைகளில் இருந்து ரேஷன் கடைகளை பிரிக்கும்போது, கிராமப் பகுதிகளாக இருந்தால் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் 150 குடும்ப அட்டைகள் இருந்தால் பிரித்துத் தரப்படும். மலைப் பகுதியாக இருந்தால் தாய்க் கடையில் 400 குடும்ப அட்டைகளும் ஒரு கிலோ மீட்டர் தூரமும், 100 வார்டுகள் இருந்தால் அந்தக் கடைகள் பிரித்துத் தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், ரேஷன் கடைகளில் ஒரே நாளில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளுக்கு அரிசி, கோதுமை, பாமாயில், பருப்பு, சர்க்கரை தங்கு தடையின்றி அனுப்பப்பட்டு வருவதாகவும், மாதத்தின் முதல்நாளில் இருந்து எந்த நாளில் வேண்டுமானாலும் அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.