ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் அரசு பல்வேறு விதமான புதிய விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் அறிமுகம் செய்து வருகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை ஏற்றம், இறக்கம் போன்ற தகவல்களும் அறிவிக்கப்படுகிறது. இதேபோல வங்கி உள்ளிட்ட சேவைகளிலும் அரசு விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவையும் மாத தொடக்கத்தில் அப்டேட் செய்யப்படுகிறது. இந்நிலையில், பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், புதிதாக ஏற்பட இருக்கும் மாற்றங்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
பான் கார்டு :
ஆதார் போலவே பான் கார்டு விநியோகிப்பதிலும் புதிய கட்டுப்பாடுகளையும், மாற்றங்களையும் கொண்டு வர மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதாவது, ஆதார் கார்டு போலவே பான் கார்டு எடுப்பதற்கும் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என தெரிகிறது. மேலும், தனியார் நிறுவனங்களிடம் இருக்கும் பான் கார்டு விண்ணப்பிக்கும் முறை ரத்து செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வங்கிக் கடன் வட்டி விகிதம் :
பிப்ரவரி மாதத்தில் வங்கிக் கடன் வட்டி விகிதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் சமீபத்தில் அதிகரித்ததை தொடர்ந்து வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருகின்றன. பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு ரெப்போ விகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வங்கிகளில் கடன் வாங்குபவர்களுக்கு அதிக வட்டி விகிதம் விதிக்கப்படும். மேலும், வங்கிக் கடனை திருப்பி செலுத்துவதற்கு அதிக காலம் எடுக்கும்.
ஃபாஸ்ட் டேக் சேவையில் மாற்றங்கள் :
நாளை (ஜனவரி 31) முதல் கே.ஒய்.சி முழுமையடையாத ஃபாஸ்ட் டேக் சேவைகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்ட் டேக் மட்டுமே செல்லுபடியாகும் வகையில் புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒரு வாகனத்திற்கு எடுக்கப்பட்ட ஃபாஸ்ட் டேக் மற்ற வாகனங்களுக்கு செல்லுபடியாகாது என்று நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை :
வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்படும் சிலிண்டரின் விலை, அடுத்த மாதத்தில் ரூ.1,898-க்கு விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. மேலும், பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் மற்றும் கடைகளில் உபயோகிக்கப்படும் சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ரயில்வே அட்டவணைகளில் மாற்றம் :
அடுத்த மாத தொடக்கத்தில் ரயில்வே கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால் பயணிகளின் ரயில் சேவையில் மாற்றம் இருக்கும். சரக்கு ரயில்கள் மற்றும் சில பயணிகள் ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் வரப்போகிறது. இந்த புதிய அட்டவணைப்படி ரயில்வே போக்குவரத்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.