மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து 32 வயது பெண் ஒருவரும், அவருடன் 22 வயது வாலிபர் ஒருவரும் சூரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் மாநிலத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த பெட்டியில் 60 பயணிகள் வரையில் இருந்தனர். இந்த நிலையில் தான் குவாலியரை கடந்து ரயில் சென்று கொண்டிருந்தபோது 5 வாலிபர்கள் அந்த பெண்ணை தங்களுடைய செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். ஆனால் இதற்கு அந்த பெண்ணுடன் வந்த வாலிபர் எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது ஆகவே அந்த 5 பேரும் அந்த பெண்ணையும், வாலிபரையும் அடித்து உதைத்துள்ளனர்.
அதன் பிறகு பிரச்சனை வேண்டாம் என முடிவு செய்து அந்த பெண்ணும், அந்த வாலிபரும் ரயிலின் வாசல் பக்கம் சென்று அமர்ந்தனர். அங்கேயும் அந்த 5 நபர்களும் சென்று அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது மேலும் பாலியல் பலாத்காரம் செய்யவும் முயற்சி செய்துள்ளனர். அப்போது அவருடன் வந்த நண்பர் அந்த அனைவரையும் தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் இளம் பெண்ணையும், அவரது நண்பரையும் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசியது.
இந்த சம்பவம் நடைபெற்ற போது அந்த பெட்டியில் பயணம் செய்த யாருமே அந்த 5 பேரையும் தட்டி கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. அரைகுறை ஆடைகளுடன் இருந்த அந்த பெண்ணிற்கு அவருடைய நண்பர் தன்னுடைய கிழிந்த சட்டையை அணிந்து கொள்வதற்காக வழங்கி உள்ளார். படுகாயம் அடைந்த இருவரும் வனப்பகுதியில் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றுள்ளனர்.
ஆனால் வழியில் இருந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே அவர்களுக்கு உதவ முன் வரவில்லை. அதன் பிறகு ஒரு மூதாட்டி அவர்களுக்கு உதவி புரிந்தார். அவர் தன்னுடைய சேலை ஒன்றை அந்த பெண்ணுக்கு வழங்கி உள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.