திமுக வெற்றி பெற்றால் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என தேனியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேனி நகரில் பங்களாமேடு பகுதியில் திருந்த வேனில் நின்றபடியே தேர்தல் பரப்புரை செய்தார் அப்போது பேசிய அவர் “ வரும் ஏப்ரல் 19ஆம் தேதி உதய சூரியன் சின்னத்தில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும். தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றால் மாதம் இரண்டு நாட்கள் தேனி தொகுதிக்கு நான் வந்து உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்.
சி ஏ ஜி அறிக்கையில் 9 வருடத்தில் ஏழரை லட்சம் கோடி எங்கு போனது என தெரியவில்லை. சாலை போடுவதில் முறைகேடு மருத்துவ காப்பீடு திட்டத்தில் முறைகேடு செய்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. செய்வதை சொல்வோம் சொல்வதை செய்வோம் கலைஞர் வழியில் வந்தவர்கள் நாம். கேஸ் சிலிண்டர் விலை 450 ரூபாயில் இருந்து உயர்ந்து 1100 ரூபாய்க்கு மேல் ஆகிவிட்டது. தற்போது நமது தேர்தல் வாக்குறுதிபடி, ஒரு கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு கொடுக்கப்படும்.
ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கு கொடுக்கப்படும். டீசல் 65 ரூபாய்க்கு கொடுக்கப்படும். சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்தும் அகற்றப்படும். முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுக் கிற்கு லண்டனில் சிலை தமிழக அரசு சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. போடியில் 100 கோடி செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி தொகுதி கடமலைக்குண்டு பகுதியில் 250 கிராம கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 162 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.வாழை திராட்சை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும். திண்டுக்கல் சபரிமலை ரயில் பாதை அமைக்கப்படும். 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
வரும் ஜூன் மூணு கலைஞரின் நூறாவது பிறந்தநாள். அதற்கடுத்த நாள் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை. கலைஞருக்கு பிறந்தநாள் பரிசாக 40க்கு 40 தொகுதிகளும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். உங்களது வீட்டுப் பிள்ளையாக இருந்து கேட்கிறேன். திமுகவை வெற்றி பெறச் செய்யுங்கள். தங்க தமிழ்ச்செல்வனை பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இப்பிரச்சார கூட்டத்தில் ஏராளமான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்