வரும் 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடைக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு முறையீடு செய்துளது..
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. தனது தலைமையில் ஒற்றை தலைமை அமைய வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.. ஆனால் ஓபிஎஸ் இரட்டை தலைமையே வேண்டும் என்று கூறி வருகிறார்.. இதனிடையே ஜூலை 11-ல் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால் வரும் 11-ம் தேதி பொதுக்குழுவே நடைபெறாது என்று ஓபிஎஸ் தரப்பு கூறுகிறது..
இதனிடையே கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவேசமாக மேடையில் அறிவித்தார். அதன் பின்னர், அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஐகோர்ட் உத்தரவை மீறி அவைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உத்தரவை மீறியதாகவும் உறுப்பினர் சண்முகம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிமன்ற உத்தரவை மீறி நியமிக்கப்பட்ட அவைத்தலைவர் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது.. மேலும் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது..
நள்ளிரவு விசாரணையின் போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் 23-ம்தேதி பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.. மேலும் 11-ம் தேதி பொதுக்குழுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்த மேல் முறையீட்டில் கோரிக்கை வைக்க முடியாது எனவும், பழைய உத்தரவுகள் அனைத்தும் ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவித்தனர்..
மேலும் ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தொடர்பாக மட்டுமே நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கும் அமர்வு விசாரிக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.. ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி தனி நீதிபதியை அணுகும் படி நீதிபதிக அறிவுறுத்தினர்..
இந்நிலையில் வரும் 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடைக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு முறையீடு செய்துளது.. ஜூலை 11-ல் பொதுக்குழு நடப்பதாக நேற்று மாலை தான் தங்களுக்கு நோட்டீஸ் வந்ததாகவும், ஆனால் பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.. மேலும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தன்னிடம் ஆலோசிக்காமல் இந்த பொதுக்குழு நடைபெற உள்ளதாகவும், எனவே இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. அவசர வழக்காக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்ததை ஏற்று இந்த வழக்கை நாளை விசாரிக்க உள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..