மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில் காதலி தனியாக அழைத்ததால், ஆசையுடன் சென்ற இளைஞர், கடைசியில் எதுவுமே இல்லாமல் நிர்வாணமாக நடுரோட்டில் பரிதவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ”பாதிக்கப்பட்ட பாலாஜி ஷிவ்பகத் என்பவர் ஷஹாபூரில் கட்டுமான தொழில் செய்து வந்துள்ளார். அவர் கடந்த சில ஆண்டுகலாக போயர் என்ற பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார். அது மெல்ல காதலாக மாறியதில் இருவரும் உறவில் இருந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த ஜூன் 28ஆம் தேதி ஷஹாபூரில் உள்ள அட்கான் நெடுஞ்சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மாலை 4.30 மணிக்கு வருமாறு ஷிவ்பகத்தை போயர் அழைத்துள்ளார். அந்த இளைஞனும் அங்கே சென்ற நிலையில், இருவரும் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது திடீரென அங்கே வந்த 4 பேர் அவரை பிடித்துத் தாக்கியுள்ளனர். அப்போது தான் அந்த இளம்பெண் பேயரின் கூட்டாளிகள் என்பது தெரியவந்துள்ளது.
இரவு முழுக்க அவரை கட்டி வைத்து அடித்துள்ளனர். மறுநாள் அதிகாலை நேரத்தில் அந்த இளைஞனின் ஆடைகளை எல்லாம் கழற்றிய அந்த கும்பல், நிர்வாணமாக அவரை ஷாஹாப்பூர் நெடுஞ்சாலையில் வீசிச் சென்றனர்” என்று போலீசார் தெரிவித்தனர். இரவு முழுக்க தாக்கியதில் அந்த இளைஞர் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து எப்படியோ தள்ளாடிக் கொண்டு அவர் அருகில் இருந்து மருத்துவமனைக்கு வந்துவிட்டார். அங்கு இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின்னரே அவரது உடல்நிலை சற்று தேறியுள்ளது. தனக்கு ஏற்பட்ட சம்பவத்தின் பாதிப்பில் இருந்து அவர் இன்னுமே முழுமையாக மீளவில்லை.
தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து ஷிவ்பகத் கூறுகையில், “அவளுக்காக நான் அனைத்தையும் செய்தேன். அவர் தங்குவதற்காக சிறிய வீட்டை கூட கட்டிக் கொடுத்தேன். அவரது விருப்பத்திற்கு ஏற்ப அனைத்தையும் செய்தேன். இருப்பினும் எனக்கு அவள் துரோகம் செய்துவிட்டார். வேறு ஒருவருடன் சேர்ந்து என்னைக் கொடூரமாகத் தாக்கினார். அன்றைய தினம் ஒரு புடவை, தங்கக் கம்பல், கொலுசுகள் மற்றும் வளையல், குடையுடன் வந்து சந்திக்கச் சொன்னார். நானும் அனைத்தையும் எடுத்துக் கொண்டு போனேன். இருவரும் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது எங்கிருந்தோ வந்த 4 பேர் என்னைப் பிடித்துத் தாக்கத் தொடங்கினர். எனது காரிலேயே என்னைக் கடத்திச் சென்றனர். அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றுக்கு இழுத்துச் சென்று அங்கே வைத்து என்னை இரவு முழுக்க தாக்கினர்” என்று தெரிவித்துள்ளார்.
இளைஞரை கடுமையாகத் தாக்கிய அவர்கள், ஆடைகளைக் களைந்து போட்டோ மற்றும் வீடியோவும் எடுத்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து தங்கச் சங்கிலி, 7 மோதிரம் ஆகியவற்றையும் பறித்துள்ளனர். அதன் பிறகு கண்ணில் மிளகாய் பொடியை தூவிவிட்டு நிர்வாணமாகவே தேசிய நெடுஞ்சாலையில் நடுரோட்டில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். அப்படியே தள்ளாடியபடி அருகில் இருந்த போலீஸ் நிலையத்திற்குச் சென்ற அந்த இளைஞர், அங்கிருந்து தனது நண்பருக்கு போன் செய்துள்ளார். அதன் பின்னரே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள பாலாஜி ஷிவ்பகத்தின் காதலி போயர் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.