குட் பேட் அக்லி படத்தை பார்க்க சென்ற அஜித் ரசிகர்கள், உற்சாகத்தில் திரையரங்கில் இருக்கைகள் சேதப்படுத்தியதால், அடுத்த காட்சிக்கு படம் பார்க்க சென்ற குடும்பத்தினர் பி.வி.ஆர். திரையரங்க ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குட் பேட் அக்லி படத்தை அஜித் ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக கொண்டாடி வரும் நிலையில், இப்படம் வெளியான முதல் 5 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ.101 கோடியை வசூலித்துள்ளது. மேலும், முதல் வார இறுதிக்குள் உலக அளவில் ரூ.200 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று தமிழ் புத்தாண்டு விடுமுறை என்பதால் படத்தை காண திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது. பலர் தங்கள் இருக்கைகளை முன்கூட்டியே முன்பதிவு செய்து படம் பார்த்துச் சென்றனர்.
இப்படத்தை கொண்டாடிய ரசிகர்கள், உற்சாக மிகுதியால் இருக்கைகள் மீது ஏறி நின்று அலப்பறை செய்ததால், சில திரையரங்குகளில் இருக்கைகள் சேதமாவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், சென்னை வேளச்சேரி பி.வி.ஆர். திரையரங்கில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், தனது குடும்ப உறுப்பினர்கள் 8 பேருடன் குட் பேட் அக்லி படம் பார்க்க வந்துள்ளார். அவர் முன்பதிவு செய்த இருக்கைகள் உட்கார முடியாத அளவில் சேதமடைந்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டபோது, முறையான பதிலளிக்காமல், காத்திருக்க வைத்துள்ளனர். இதனால், அங்கு வாக்குவாதம் நடந்தது.
தங்களுக்கு மாற்று இருக்கைகள் ஏற்பாடு செய்து தருமாறு அந்த குடும்பத்தினர் கேட்ட நிலையில், இப்போதைக்கு முடியாது என்று கூறியுள்ளனர். மேலும், தாங்கள் சொல்லும் வேறு தினத்தில் வந்து படத்தை பார்க்குமாறு ஊழியர்கள் கூறியதால், குடும்பத்தினர் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஊழியர்களை தங்களது செல்போனில் படம் பிடித்தபோது, அதை பறிக்க முயன்றதால் தள்ளு முள்ளு சம்பவமும் நிகழ்ந்தது.
பின்னர், அந்த இருக்கைக்கு உரிய பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாக ஊழியர்கள் கூறிய நிலையில், தங்கள் குழந்தைகளை ஏமாற்ற விரும்பாத பெற்றோர், அவர்கள் 4 பேரை மட்டும் படம் பார்க்க உள்ளே அனுப்பி விட்டு, மற்றவர்கள் வெளியில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.