மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில், கொண்டாட பல்வேறு நடவடிக்கைகளை திமுக மற்றும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் 17.04.2023 அன்று நடைபெற்றது.
அப்போது, ”சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் முதலமைச்சர்களின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால், மாணவர்களுக்கு தற்போது இனிப்பு பொங்கல் வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக கருணாநிதி பிறந்த தினத்தில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.