அதிபர் பதவியில் இருந்து கோட்டபய ராஜபக்ச ராஜினாமா செய்ததாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி அந்நாட்டு கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.. எனினும் அதிபர் கோட்டபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்று போராடங்கள் மீண்டும் வலுப்பெற்றன.. இதையடுத்து தனது அதிகாரப்பூர்வ அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிய கோட்டபய முதலில் மாலத்தீவுக்கு சென்றார்.. ஆனால் அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பின்னர் சிங்க்பூர் சென்றார்.. எனினும் அதிபர் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் தொடர்ந்தது..
இதனிடையே பிரதமர் விக்கிரமசிங்கே இலங்கையில் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார். மேலும் இலங்கையில் பகல் 12 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.. தலைநகர் கொழும்புவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..
இதனிடையே அதிபர் கோட்டபய நேற்று அதிபர் பதவியில் இருந்து விலகியதாக நேற்று மாலை தகவல் வெளியானது.. இலங்கை மக்கள் இதனை ஆடல் பாடலுடன் உற்சாகமாக கொண்டாடி தீர்த்தனர்.. இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள கோட்டபய, அங்கிருக்கும் இலங்கை தூதரகம் வழியாக தனது ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்..
அதிபர் பதவியில் இருந்து கோட்டபய ராஜபக்ச ராஜினாமா செய்ததாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.. இலங்கையின் 8-வது அதிபர் கோட்டபயவின் ராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.. கோட்டபய ராஜபக்ச ராஜினாமா அறிவிப்பு குறித்து குழப்பங்கள் நிலவிய நிலையில், அவர் பதவி விலகியதை சபாநாயகர் மகிந்த யாப்பா முறைப்படி அறிவித்துள்ளார்..