தஞ்சை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மருத்துவ ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூரை அடுத்த வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ராபர்ட் எடிசன் (50 ). இவர் , தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதை அடுத்து அரை மயக்கத்தில் இருந்துள்ளார்.
ஸ்ட்ரெச்சரை தள்ளும் ஊழியரான ராபர்ட் எடிசன் ஸ்ட்ரெச்சரில் அந்த பெண்ணை தள்ளிக்கொண்டு வந்து அறுவை சிகிச்சை அறையில் விட்டுள்ளார். பின்னர் அரை மயக்கத்தில் இருந்தபோதே அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் , அக்கம்பக்கத்தினரை அழைத்து கூச்சலிட்டதால் நேற்று ராபர்ட் எடிசன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இது குறித்து உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வந்த பெண்ணைக்கூட விட்டுவைக்காத ராபர்ட் எடிசனை மருத்துவமனை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.