அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் இளைய மகன் சசிமோகன். இவரது மனைவி பூர்ணிமா, கடந்த 18ஆம் தேதி மாலையில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் உள்ள தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தார். பூஜை அறையில் இருந்த விளக்கு தீ பிடித்ததில் அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதில், சுமார் 80% தீ காயத்துடன் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், பூர்ணிமா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
அன்பழகனின் இளைய மகன் மற்றும் பூர்ணிமா இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், தீவிபத்தில் சிக்கி பூர்ணிமா உயிரிழந்தது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகளின் இறப்பு குறித்த செய்தி அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.