ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில்ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர் நபா கிஷோர் தாஸ். பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகருக்கு அருகே உள்ள காந்தி சவுக் பகுதிக்கு குறைதீர்க்கும் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்க சென்றிருந்தார். அந்த பகுதிக்கு சென்று காரில் இருந்து இறங்கிய அவர் மீது திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இதில் அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது 2 குண்டுகள் பாய்ந்து அவர் சுருண்டு விழுந்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை மீ ட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமானதையடுத்து, ஜார்சுகுடா விமான நிலையத்தில் இருந்து வான் வழியாக புவனேஸ்வருக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை அமைச்சர் நப தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.