“திமுகவை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி வந்துள்ளனர். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், “நான் துணை முதல்வராக வர வேண்டும் என்ற முதல் குரல் தஞ்சை மாவட்டத்தில் இருந்து தான் வந்தது. பிறகு நான் துணை முதல்வராக நியமிக்கப்பட்டேன். நவம்பர் மாதம் பொதுவாக மழை பெய்யும் மாதம் என்பார்கள். இன்று நான் உங்கள் அன்பு மழையில் நனைந்து தஞ்சைக்கு வந்துள்ளேன்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என பலரும் கூறுகிறார்கள். திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றித் தான் பல மாநிலங்கள் ஆட்சி நடத்தி வருகின்றன. திராவிட மாடல் ஆட்சியின் தொடர் வெற்றி சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களே பதில் கூறுவார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”பல அணிகளாக சிதறி கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜகவும் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என துண்டு போட்டு காத்திருக்கின்றனர். அவர்களுக்கு முதல்வர் திட்டவட்டமாக பதில் கூறிவிட்டார். நமது கூட்டணி கட்சி தலைவர்களும் திமுக கூட்டணியில் தான் தொடர்வோம் என உறுதியான நிலையில் உள்ளனர்” என்றார்.