அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. தனது தலைமையில் ஒற்றை தலைமை அமைய வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.. ஆனால் ஓபிஎஸ் இரட்டை தலைமையே வேண்டும் என்று கூறி வருகிறார்.. இதனிடையே ஜூலை 11-ல் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால் வரும் 11-ம் தேதி பொதுக்குழுவே நடைபெறாது என்று ஓபிஎஸ் தரப்பு கூறுகிறது..
இதனிடையே நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக மருது அழகுராஜ் சமீபத்தில் அறிவித்திருந்தார்.. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தை கடுமையாக விமர்சித்தார்.. மேலும் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர்களை டெண்டர் எடுக்க தயாராகி வருவதாகவும் விமர்சித்தார்.. பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்-ஐ திட்டமிட்டே அசிங்கப்படுத்தியதாகவும், எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து ஒருவார்த்தை கேட்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.. மேலும் அதிமுக ஜாதி கட்சியாக மாறி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்..
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது ” நமது அம்மா நாளிதழில் பல முறைகேடுகள் செய்து விலக்கிவைக்கப்பட்டவர் தான் மருது அழகுராஜ்.. அவர் இன்று ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து கூலிக்கு வேலை செய்து கொண்டு வருகிறார்.. பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.. ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் மீது சேற்றை வாரி இறைக்கிறார் மருது அழகுராஜ்.. பொதுக்குழு உறுப்பினர்களை கொச்சைப்படுத்தி பேசியதால் தொண்டர்கள் கொதித்தெழுந்துள்ளனர்..
ஓபிஎஸ்-ன் கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து ஏன் மருது அழகுராஜ் பேசவில்லை.. சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ், ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக பேசியது குறித்து ஏன் மருது அழகுராஜ் பேசவில்லை.. ஓபிஎஸ்-ன் மகன் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டியது குறித்து ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை..” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்..