பொதுவாக கேக் சாப்பிடுவதென்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அலாதி பிரியம் இருக்கும். ஆனால் பல கடைகளில் சென்று வாங்கி வரும் கேக்கில் சுகாதாரம் இருக்காது என்பதால் அதனை பெரிதும் யாரும் விரும்புவதில்லை. இன்னும் சொல்லப்போனால் குழந்தைகளுக்கு கூட அதனை வாங்கி கொடுப்பதில்லை.
ஆனால் குழந்தைகள் ஆசையாக கேக்க வேண்டும் என்று கேட்டால் இனி உங்களுடைய வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். மைக்ரோ ஓவன் இல்லாதவர்களும் கடாய் அல்லது குக்கர் உள்ளிட்டவற்றை வைத்து இந்த கேக்கை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. பேக்கரிகளில் மிகவும் பிரபலமான ரவா கேக்கை எப்படி செய்வது என்பதை தற்போது நாம் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரவா 1 கப், தயிர் ½ கப், நெய் ¼ கப், நாட்டு சர்க்கரை ⅓ கப், கோதுமை மாவு ¼ கப், பால் பவுடர் 2 டீஸ்பூன், பேக்கிங் பவுடர் ஒரு டீஸ்பூன், பேக்கிங் சோடா ¼ டீஸ்பூன், ஏலக்காய் 2 விதைகள் மட்டும், காய்ச்சி ஆற வைத்த பால் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை:
முதலில் தயிருடன் நெய்யை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும், பின்னர் ஒரு மிக்சர் ஜாரில் ரவை, நாட்டு சர்க்கரை, கோதுமை மாவு, பால் பவுடர், உப்பு மற்றும் ஏலக்காய் உள்ளட்டவற்றை சேர்த்து பொடியாக்கி கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த பொடியை கலக்கி வைத்துள்ள நெய் மற்றும் தயிர் கலவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இத்துடன் காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும், பின்னர் பாலை கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு திக்கான மாவை தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் ஸ்டாண்ட் வைத்து மூடி பத்து நிமிடங்கள் சூடு செய்து கொள்ள வேண்டும்.
தற்போது ஒரு பேக்கிங் பேன் அல்லது கிண்ணத்தில் எண்ணெய் அல்லது நெய் தடவி தயாராக வைத்துள்ள கேக் மாவை ஊற்ற வேண்டும். இதனை சூடாக இருக்கின்ற கடாயினுள் வைத்து சுமார் 40 முதல் 45 நிமிடங்கள் பேக் செய்து எடுக்க வேண்டும்.. பின்னர் முழுவதுமாக ஆறிப்போன பிறகு டீமோல்ட் செய்து விருப்பத்திற்கு ஏற்ற வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.