தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி, மற்ற கட்சிகளை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19ல் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது. அதாவது, தமிழகத்தில் 5 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 3வது இடத்தில் உள்ளனர். அதன்படி புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகை, திருச்சி ஆகிய 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 3வது இடத்தில் உள்ளனர்.
மேலும் 12 தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவைப் பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி முன்னேறியது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ள நாம் தமிழர் கட்சி 2024 மக்களவை தேர்தலில் 8.19% வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுகிறது. அதேபோல, 2 மக்களவைத் தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட்டு வென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக மாறியது.
அரசியல் கட்சிகள் எப்படி அங்கீகரிக்கப்படுகின்றன?
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ‘Election Symbols (Reservation and Allocation) Order 1968’ தேர்தல் சின்னங்கள்(ஒதுக்கீடு) 1968 ஆணையின் மூலம் அரசியல் கட்சிகளை அங்கீகரக்கின்றது. இதற்கு தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் விண்ணப்பிக்க வேண்டும். சட்டத்திற்குட்பட்டு, நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படுகின்றன. அதன்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இரண்டு வகைப்படும். ஒன்று தேசிய கட்சி, மற்றொன்று மாநில கட்சி.
மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட ஒரு கட்சிக்கு என்ன தேவை?
சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் 6% வாக்குகள் மற்றும் குறைந்தபட்சம் 2 எம்.எல்.ஏ.க்களை பெற்றிருக்க வேண்டும் அல்லது சமீபத்திய மக்களவை தேர்தலில் அந்த மாநிலத்தில் இருந்து 6% வாக்குகள் மற்றும் குறைந்தபட்சம் ஒரு எம்.பி.யை பெற்றிருக்க வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலில் மொத்த இடங்களின் எண்ணிக்கையில் குறைந்தது 3 சதவீதம் அல்லது மூன்று இடங்களை (எது அதிகமோ அதனை பெற்றிருக்க வேண்டும்) பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு 25 உறுப்பினர்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு எம்.பி. அல்லது மக்களவையில் குறிப்பிட்ட மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட விகிதாசாரப்படி பெற்றிருக்க வேண்டும். அல்லது சட்டமன்றத் தேர்தல் அல்லது மக்களவைத் தேர்தலில் மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் குறைந்தது 8 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்
தேசிய கட்சி எப்படி அங்கீகரிக்கப்படுகிறது?
ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுவதற்கான அளவுகோலை இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. இந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதை பொறுத்து, ஒரு கட்சி தேசிய கட்சிக்கான அந்தஸ்தை பெறலாம் அல்லது இழக்கலாம். இந்த நிகழ்வுகள் மாறிக் கொண்டே இருக்கும். அதாவது அந்த நிபந்தனைகளை நிறைவேற்றாத பட்சத்தில் தேசிய கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மீண்டும் அவை நிறைவேற்றப்பட்டால் தேசிய கட்சி அந்தஸ்து வழங்கப்படும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் சின்னங்கள், 2019 கையேட்டின்படி; ஒரு கட்சியானது நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட வேண்டும் அல்லது சமீபத்திய மக்களவை அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் ஏதேனும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் குறைந்தது 6 சதவீத வாக்குகளை கட்சியின் வேட்பாளர்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது சமீபத்திய மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் நான்கு எம்.பி.க்களை பெற்றிருக்க வேண்டும் அல்லது மக்களவை தொகுதிகளில் மூன்று மாநிலங்களுக்கு குறையாமல் மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 2 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
Read more ; பரபரப்பு…! ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்.. சிபிசிஐடி அலுவலகத்தில் கேசவ விநாயகம் ஆஜர்…!