தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவில் இதுவரை 1,64,054 பேர் விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியானது. அன்றைய தினமே இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியது. பி.இ.,பி.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்பத்தை மாணவர்கள் https:/www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். அதேபோல், மாணவர்கள் சொந்தமாகவோ அல்லது பள்ளிகள், அரசின் இலவச மையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் 110 இலவச மையங்கள் அமைக்கப்பட்டு, ஜூலை 19ஆம் தேதி வரை மாணவர்கள் அசல் சான்றிதழ் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளி தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அந்த தேர்வு முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஜூலை 22ஆம் தேதி சம வாய்ப்பு எண்ணும், ஜூலை 20ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, பின்னர் கலந்தாய்வு தொடங்கவுள்ளது.
கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கிய பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவில் இதுவரை 1,64,054 பேர் விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது. 1,14,918 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியும், 87,446 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளனர்.