திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வி ஆண்டில் ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வி தகுதி சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மை கல்வி, மாவட்ட கல்வி, வட்டார கல்வி அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் கடந்த 2ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் 6ஆம் தேதி ஆகும். குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது. கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
திருத்தணி கல்வி மாவட்டம் deotiruttani@gmail.com, திருவள்ளூர் கல்வி மாவட்டம் deotlr@nic.in, ஆவடி கல்வி மாவட்டம் deoaavadi@gmail.com, அம்பத்தூர் கல்வி மாவட்டம் deoambt@gmail.com, பொன்னேரி கல்வி மாவட்டம் deopon@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்”. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.