தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில், இந்தரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கனகய்யா. இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் 24 வயதான மூத்த மகள், அதே ஊரை சேர்ந்த மகேஷ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஆனால், இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததால், ஒரு கட்டத்தில் இருவரும் காதலை முறித்துக் கொண்டனர். ஆனால், சில நாட்களுக்கு பின்னர் காதலை தொடருமாறு மகேஷ் அந்த பெண்ணிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அந்த பெண்ணுக்கு வீட்டார் பார்த்த மாப்பிள்ளையோடு திடீரென திருமணம் நடைபெற்றுள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மகேஷ், அந்த பெண்ணோடு காதலிக்கும் நேரத்தில் எடுத்துக்கொண்ட வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அந்த பெண்ணை திருமணம் செய்த நபருக்கும் வர அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மனைவியை விவாகரத்து செய்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து இதுகுறித்து வருத்தத்தில் இருந்த அவர் மனஉளைச்சலில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு பிறகும் மகேஷ் அந்த பெண்ணை தொடர்ந்து தொந்தரவு செய்துவந்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவர்கள் இருதரப்புக்கும் சமரசம் பேசியுள்ளனர். எனினும் மகேஷ் அந்த பெண்ணிடம் தொடர்ந்து தகராறு செய்துவந்துள்ளார். இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் மகேஷ் அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து மீண்டும் தொல்லை கொடுத்த நிலையில், ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் வீட்டார் அங்கிருந்த கத்தியை எடுத்து மகேஷை தாக்கியுள்ளனர். இதில் கீழே விழுந்த மகேஷின் தலையில் அங்கிருந்த பாறாங்கல்லை எடுத்து போட்டு கொடூரமாக கொலையும் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.