கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பிபின் பிரியன் (29). இவர் கார் ஓட்டுநராக உள்ளார். பொறியியல் கல்லூரியில் படித்து வரும் இவரது உறவுக்கார பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்த மாணவிக்கு உடன்பிறந்தவர்கள் இல்லாத நிலையில், பிபினை அண்ணனாகவே அழைத்து பழகி வந்துள்ளார். அந்த மாணவி வெளியே எங்கு சென்றாலும் பிபின் பிரியனை அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று பிபின் பிரியன் தனது நண்பரின் காரில் மாணவியை ஏற்றிக்கொண்டு கல்லூரியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் திருநயினார்குறிச்சியில் வந்த போது தனது நண்பரை பார்க்க வேண்டும் எனக்கூறி நண்பரின் வீட்டிற்கு மாணவியை அழைத்துச் சென்றார்.
அங்கு, மாணவிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்திலேயே அந்த மாணவி மயங்கினார். அப்போது பிபின் பிரியன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வீடியோ மற்றும் போட்டோவாக பதிவு செய்து வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த மாணவியை மீண்டும் காரில் ஏற்றி வீட்டில் இறக்கிவிட்டார். மயக்கத்தில் இருந்ததால் நடந்தவை குறித்து மாணவிக்கு தெரியவில்லை. மறுநாள் மாணவியின் செல்போனில் பேசிய பிபின் பிரியன் உன்னை பலாத்காரம் செய்த வீடியோ என்னிடம் உள்ளது. எனவே, நான் அழைக்கும் போதெல்லாம் எனது ஆசைக்கு இணங்க வேண்டும். இல்லையென்றால் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பிபின் பிரியன் மீது போலீசார் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.