“ஏண்டா எலெக்ஷன்ல நின்னோம் என்று நினைக்கும் அளவுக்கு பெரிய அனுபவங்களை சந்தித்தேன்” என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
திரைப்பட நிகழ்வு ஒன்றில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், “இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று நான் தான் சொல்லிக் கொண்டிருந்தேன். அந்த கூட்டணியில், வேறு யாரும் அப்படி சொல்லவில்லை. மாற்றம் வேண்டும் என்பதற்காகத் தான் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், யாரையும் ஏமாற்றி பிழைக்கக் கூடாது. மிகப்பெரிய சோதனைகளை சந்தித்து எனது சரக்கு திரைப்படம் ஓடிடியில் விற்ற பணம், பேரம்பாக்கத்தில் இரண்டு ப்ளாட்களை விற்ற பணத்தை எல்லாம் போட்டு தேர்தலில் நின்று நாயாக உழைத்து பல கஷ்டங்களை பட்டேன். ஆனால், ஏண்டா எலெக்ஷன்ல நின்னோம் என்று நினைக்கும் அளவுக்கு பெரிய அனுபவங்களை சந்தித்தேன்” என்றார்.
பள்ளி மாணவர்களுக்கு நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரையை இயக்குனர் பேரரசு புரிந்துகொண்டு பேச வேண்டும். நீதிபதி சந்துரு சமூக நீதிக் காவலர். சாதி கூடாது என்று சொல்லிவிட்டு சென்றீர்களே. அப்படியென்றால், நிர்மலா சீதாராமனை எதற்காக மத்திய நிதியமைச்சராக நியமித்தார்கள். பொன்.ராதாகிருஷ்ணன் அல்லது தமிழிசைக்கு அந்த பதவியை கொடுத்திருக்கலாமே. மக்களை சந்திக்காமல் வாக்குகளைப் பெறாமல் நேரடியாக பதவியில் சென்று அமர்ந்துகொள்கிறார்கள்” என்று பேரரசுக்கு கேள்வி எழுப்பினார்.
மேலும், “வாக்குப் பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாம் என்று எலான் மஸ்கே கூறுகிறார். நான் 6 ஆண்டுகளுக்கு முன்பு இதுகுறித்து போராட்டம் நடத்தினேன். உச்சநீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கை இரண்டே நிமிடங்களில் தள்ளுபடி செய்துவிட்டனர்” என்றும் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.