மை லார்ட் என்று சொல்வதை நிறுத்தினால், தனது பாதி ஊதியத்தை தருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி, வழக்கறிஞரிடம் கூறியுள்ள சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்கறிஞர்கள், நீதிபதிகளை ‘மை லார்ட்’ அல்லது ‘யுவர் லார்ட்ஷிப்’ என்று அழைப்பது, ஆங்கிலேயர் காலத்தில் இருந்து வழக்கத்தில் இருந்து வருகிறது. இது காலனியாதிக்க மனநிலை எனவும், அடிமைத்தனத்தின் அடையாளம் எனவும் கூறி, இதற்கு பதிலாக நீதிபதிகளை ’சார்’ என்று அழைத்தால் போதுமானது என கடந்த 2006இல் இந்திய பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனாலும், இது முழுமையாக பின்பற்றப்படுவதில்லை. இப்போதும், பல மூத்த வழக்கறிஞர்கள், நீதிபதிகளை ’மை லார்ட்’ என்று அழைப்பது தொடர்ந்து வருவதாக, பல தருணங்களில் நீதிபதிகளே சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றின் போது, நீதிபதிகள் போபன்னா மற்றும் நரசிம்ஹா ஆகியோர் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, வழக்கில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர் ஒருவர், பல முறை ’மை லார்ட்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி நரசிம்மா, ’மை லார்ட்’ என்று அழைப்பதை நிறுத்துமாறும், அவ்வாறு கூறுவதை நிறுத்தினால் தனது பாதி ஊதியத்தை தருவதாகவும் கூறினார். ’சார்’ என்று அழைத்தால் போதுமானது என தெரிவித்த அவர், மீண்டும் ’மை லார்ட்’ என்று கூறினால், அதன் எண்ணிக்கையை பதிவு செய்யப்போவதாகவும் அதிருப்தியுடன் தெரிவித்தார். இதனால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.