மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டால், அந்த மருத்துவமனையின் லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட நிலையில், குற்றவாளியை காவல்துறையினர் விரைந்து கைது செய்தனர். ஆனால், குழந்தையை கடத்தியவருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில், ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ”நாடு முழுவதும், குழந்தை கடத்தல் தொடர்பாக பதிவான வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து உயர்நீதிமன்றங்கள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த வழக்கை தினமும் விசாரித்து 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
அதேபோல், மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டால், உடனடியாக அந்த மருத்துவமனையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும். ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்த பின்னர், அந்த குழந்தை காணாமல் போனாலும், மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
இந்த உத்தரவில் அலட்சியம் செய்தால், அதனை தீவிரமாக எடுத்துக் கொண்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றத்தை விமர்சித்ததுடன், மேல்முறையீடு செய்யாதது ஏன் என உத்தரப்பிரதேச மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Read More : ’பாஜகவை பார்த்து விஜய்க்கு பயமா என்ன’..? வெச்சு செய்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்..!!