அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் நடைபெற்றது.. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை ரத்து என பல முக்கியமான தீர்மானங்கள் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.. இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.. அதன்படி கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து ஓ. பன்னீர்செல்வம், ஆர். வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நீக்கப்பட்டனர்.. ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட நிலையில், இபிஎஸ்-ஐ நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்..
தொடர்ந்து பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்-ஐ சுயநலவாதி என்றும், அவர் எதையும் விட்டுக்கொடுத்து இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.. மேலும் ஓபிஎஸ் கட்சிக்கு விஸ்வாசமாக இருக்கவில்லை எனவும், எட்டப்பனாக செயல்பட்டார் என்று தெரிவித்தார்.. இதனிடையே இன்று காலை ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக் கொண்டதால், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது..
இந்நிலையில் புதுகோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் சசிகலா இதுகுறித்து பேசினார்.. அப்போது “ இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செல்லாது.. தலைமை பதவி என்பது தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும்.. ஆனால் தலைமை பதவியை அடித்து பிடித்தால் அந்த பதவி என்றைக்கும் நிலைக்காது.. அது சட்டத்தின் படி செல்லாது.. இன்றைய நிகழ்வுகளை பார்க்கும் போது தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணையும் நேரம் வந்துவிட்டது.. நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை இழந்துவிடக் கூடாது.. ஒட்டுமொத்த தொண்டர்கள் ஆதரவோடு, நிஜத்தை நிச்சயம் அடைவோம்..” என்று தெரிவித்தார்..